உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அல்லு அர்ஜுன் புதிய முன்னெடுப்பு ஒன்றிணைத் தொடங்கியுள்ளார்.
நேற்று (ஜுன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும், சுற்றுச்சூழல் குறித்த முக்கியத்துவத்தை முன்வைத்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்கள். மேலும், மரங்களின் அவசியத்தை உணர்த்தியும் புகைப்படங்களை வெளியிட்டார்கள்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தின், இன்னும் நிறைய மரங்களை நடுவோம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவோம், இயற்கை நமக்குத் தரும் வளங்களைப் பாராட்டுவோம், அடுத்த தலைமுறைக்காக நமது பூமியைப் பசுமையாக்குவோம் என்று உறுதி பூணுவோம்.
இது எனது இதயத்துக்கு நெருக்கமான விஷயம். இந்த முன்னெடுப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு செடியை நீங்கள் நடும் புகைப்படத்தைப் பகிருங்கள். அதில் சிலவற்றை நானும் பகிர்வேன். இந்த பூமியைக் காப்பாற்ற ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்"
இவ்வாறு அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
தற்போது சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அல்லு அர்ஜுன். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்பட உள்ளது.