எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது 'காக்கா முட்டை' திரைப்படம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியான படம் 'காக்கா முட்டை'. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தனுஷ், வெற்றிமாறன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், 2 தேசிய விருதுகளை வென்றது. இன்றுடன் (ஜூன் 5) 'காக்கா முட்டை' வெளியாகி 6 ஆண்டுகள் ஆகின்றன.
இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது! 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் 'காக்கா முட்டை' வெளியானது. எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம். தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது. இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி".
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.