தமிழ் சினிமா

பீப் பாடல் விவகாரம்: சிம்பு மீதான மேலும் 2 வழக்குகள் வாபஸ்

செய்திப்பிரிவு

பெண்களை இழிவுபடுத்தி ஆபாச பாடல் பாடிய விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 2 வழக்குகளை புகார்தாரர்கள் இன்று வாபஸ் பெற்றனர். சிம்பு மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இதுவரை தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3 வாபஸ் பெறப்பட்டுள்ளன.

பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் பாடியதாகக் கூறி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டையிலுள்ள 9-வது மற்றும் 23-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் 4 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஏ.காசி, பாட்டாளி மக்கள் கட்சி, தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சினிமா பத்திரிக்கையாளர் ஜெ.பிஸ்மி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கே.கே.நகர் பகுதி செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இதில், வழக்கறிஞர் காசி மற்றும் லெட்சுமணன் ஆகியோர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி சிம்பு மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். அவர்கள் 2 பேரும் கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தல்படி வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

சென்னை பெருநகர 9-வது மாஜிஸ்திரேட் ஏ.பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் முன்பு வழக்கறிஞர் காசி ஆஜராகி அவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதேபோல் லெட்சுமணன் பெருநகர 23-வது மாஜிஸ்திரேட் எம்.சுரேஷ் முன்பு ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

ஏற்கெனவே பாமக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் 2 நாட்களுக்கு முன்பு சிம்பு மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தொடர்ந்த வழக்கு மட்டும் தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

SCROLL FOR NEXT