தமிழ் சினிமா

என் பிறந்தநாளை மறந்து மழை நிவாரணப் பணிகள் செய்வீர்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை

ஐஏஎன்எஸ்

"மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே முக்கியம். எனவே,எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று" ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

வரும் சனிக்கிழமை (டிச.12) ரஜினிகாந்தின் 65-வது பிறந்த தினமாகும். ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரஜினியின் பிறந்தநாளை உற்சாகத்துடன் பெரிய அளவில் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

ஆனால், இம்முறை தமிழகத்தில், குறிப்பாக சென்னையிலும் கடலூரிலும் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவதியுறும் மக்களுக்கு உதவுவதே முக்கியம், தன் பிறந்த நாளை கொண்டாடுவது முக்கியமல்ல என்று ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.

மேலும், ரஜினி பிறந்த தினத்தன்று எந்திரன்-2 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது ரஜினிகாந்த் கபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT