தமிழ் சினிமா

’ஆர்டிகிள் 15’ ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

தமிழில் உருவாகி வரும் 'ஆர்டிகிள் 15' ரீமேக்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு.

இதில் உதயநிதிக்கு நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ஆரி, சிவாங்கி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், மிக முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தமாகியுள்ளார். கதைக்கு மிகவும் திருப்பம் தரக்கூடிய கதாபாத்திரம் என்கிறது படக்குழு.

தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வரும் 'அன்பறிவு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ஷிவானி ராஜசேகர். அதனைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தமாகியுள்ள இரண்டாவது படமாக 'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், 2-ம் கட்டப் படப்பிடிப்பைப் படக்குழு தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT