ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் படக் குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்த சூழலில், ரஜினிக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பை உடனே ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி. 4 மாத இடைவெளிக்குப் பிறகு, படப்பிடிப்பில் தனது காட்சிகளை முடித்துக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில், தேர்தல் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன், ஒட்டுமொத்த படக்குழுவினரும் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவுநேர படப்பிடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என ரஜினியும் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாளில் ரஜினியின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, மே 13-ல் சென்னை திரும்ப உள்ளார். சில வார ஓய்வுக்குப் பிறகு ஜூலையில் அமெரிக்கா செல்ல ரஜினி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.