தமிழ் சினிமா

டிஜிட்டலில் மறுசீரமைப்பு: புத்துயிர் பெறும் 26 மணிரத்னம் படங்கள்

செய்திப்பிரிவு

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய படங்களின் பிரதிகள் புதுப்பிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்படவுள்ளன.

திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை என்று கருதப்படும் திரைப்படங்களின் பழைய பிரதிகளை எடுத்து அவற்றை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து மறுசீரமைக்கும் பணியை மேற்கத்திய சினிமா கலைஞர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த கால திரைப்படங்கள் ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டிருக்கும், அந்த ஃபிலிம்களை முறையாகப் பரமாரிக்கவில்லையென்றால் அவை பழுதாகிவிடும். இதனால் அந்தந்தப் படங்களின் பிரதிகள் நிரந்தரமாக அழிந்து விடும் அபாயமும் உள்ளது.

இதற்கென தனியாக நிறுவனங்கள், அமைப்புகள் அயல்நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில் இப்படியான திரைப்பட ஃபிலிம் நெகட்டிவ்களை பராமரிப்பது, பாதுகாப்பது முறைபடுத்தப்படவில்லை. தமிழ் திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசன், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா உள்ளிட்டோர் தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கியமான திரைப்படங்களின் பிரதிகளை பாதுகாப்பது குறித்து பல முறை பேசியுள்ளனர்.

தற்போது, இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் மணிரத்னமின் திரைப்படங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தியாவில் முகல் ஈ அசாம் உள்ளிட்ட வெகு சில திரைப்படங்கள் இப்படி டிஜிட்டலில் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் முதன்முறையாக 8கே தரத்தில் திரைப்படங்கள் டிஜிட்டலாவது இதுவே முதல்முறை.

தளபதி, ரோஜா, திருடா திருடா என மணிரத்னம் எடுத்திருக்கும் அத்தனை படங்களும் தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு செய்து வருகிறது.

ஏற்கெனவே இந்திய திரைத்துறையில் அந்நாளில் முக்கிய இயக்குநர்கள் பலரின் திரைப்படங்களை இந்த அமைப்பு மறுசீரமைத்துள்ளது. தற்போது மணிரத்னம் திரைப்படங்களும் அதே வகையில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புத்துயிர் பெறுகின்றன.

மணிரத்னம் எடுத்த பழைய படங்களின் பிரதிகள் சில மோசமான நிலையில் இருந்துள்ளதால், முதலில் அவற்றை எடுத்து, சரி செய்து, சுத்தம் செய்து பின் டிஜிட்டலாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் இந்த வேலைகள் சென்னை பிரசாத் கூடத்தில் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இப்படி டிஜிட்டலாக்கப்படுவது அந்தந்தத் திரைப்படங்களை பாதுகாக்கவே என்றும், ஓடிடியில் வெளியிடும் திட்டங்களை எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT