போலி விளம்பரம். 
தமிழ் சினிமா

தன் பெயரில் பரவும் போலி விளம்பரம்: ஏமாற வேண்டாம் என்று சிபி சத்யராஜ் ட்வீட்

செய்திப்பிரிவு

தன் பெயரில் பரவி வரும் போலி விளம்பரத்தைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று நடிகர் சிபி சத்யராஜ் ட்வீட் செய்துள்ளார்.

இணையத்தில் உண்மையான விளம்பரங்களை விட மோசடியான, போலி விளம்பரங்களே அதிகம். இதில் மக்களை நம்பவைக்க பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்துவதும் வழக்கம். குறிப்பாகப் பண மோசடி, இளம் பெண்களை ஏமாற்றும் மோசடிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி நடந்து வருகின்றன. அப்படி நடிகர் சிபி சத்யராஜின் புகைப்படத்துடன், நடிகர்கள் தேர்வு பற்றிய விளம்பரம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சிபி சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க, 18-28 வயது வரையிலான பெண்கள் நாயகி கதாபாத்திரத்துக்கும், 20-28 வயது வரையிலான பெண்கள் தோழி கதாபாத்திரத்துக்கும், 22-25 வயது வரையிலான பெண்கள் துணை கதாபாத்திரங்களுக்கும் தேவை என்று இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் பற்றி தெளிவுபடுத்தியிருக்கும் சிபி சத்யராஜ், "அன்பு நண்பர்களே. இந்தப் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக அறிகிறேன். இது ஒரு போலியான அறிவிப்பு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியாது. இந்த மோசடியோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தயவுசெய்து இதைக் கண்டு ஏமாறாதீர்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT