தமிழ் சினிமா

’எனிமி’ படத்தில் நடித்து முடித்த ஆர்யா: விஷாலுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்

செய்திப்பிரிவு

'எனிமி' திரைப்படத்தில் ஆர்யா நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஆனந்த ஷங்கரும், ஆர்யாவும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

'அரிமா நம்பி', 'இருமுகன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் 'எனிமி'. மேலும் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆர்யா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து ஆனந்த் ஷங்கரும், ஆர்யாவும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர்.

"ஆர்யாவின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்தன. ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். இப்போது ஊரடங்குக்கு முன் வீட்டுக்கு ஓடுகிறேன்" என்று வெள்ளிக்கிழமையன்று ஆனந்த் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.

"அற்புதமான படத்தைக் கொடுத்த என் நண்பன், எதிரி விஷாலுக்கு நன்றி. மறக்க முடியாத படப்பிடிப்பாக இருந்தது. எங்களை நம்பிய எங்கள் தயாரிப்பாளருக்கு என் அன்பு. ஆனந்த் ஷங்கர், ஆர்.டி.ராஜசேகர் உள்ளிட்ட குழுவின் பணி அற்புதமானது. இப்போது தமனின் இசைக்காகக் காத்திருக்கிறேன்" என்று ஆர்யா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இயக்குநர் ஆனந்த் ஷங்கருக்கு பதிலளிக்கும் வகையில், "உங்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது சகோ. உங்கள் உற்சாகமும், திரைப்படம் எடுக்கும் விதமும் எனக்குப் பிடித்திருந்தது. வேற லெவல். மீண்டும் விரைவில் உங்களுடன் பணியாற்றுவேன் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT