தமிழ் சினிமா

கலைஞர்களின் முழு விவரங்கள் சேகரிப்பு திட்டம்: நடிகர் சங்கம் தொடங்கியது

ஸ்கிரீனன்

கலைஞர்களின் முழு விவரங்களை சேகரித்து பதிவு செய்யும் பணியை இன்று (டிசம்பர் 27) முதல் நடிகர் சங்கம் தொடங்கியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலின்போது பாண்டவர் அணி அளித்த வாக்குறுதிகளின் ஒன்றான ‘குருதட்சணை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் முதல் கட்டமாக கலைஞர்களின் முழுவிவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப் பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் என அனைத்து விஷயங்களும் சேகரிக்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கவிழா தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

திட்டத்தை தொடங்கிவைத்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நாசர் பேசியது, "தீபாவளி, வெள்ள நிவாரணப் பணிகள் என அனைத்துm முடித்து முதல் திட்டமாக கலைஞர்களின் முழு விவரங்களை சேகரிக்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். இது ஒரு முக்கியமான, அத்தியாசிவமான திட்டமாகும்.

கார்த்தி உள்ளிட்ட தற்போதைய உறுப்பினர்கள் எல்லாம் இப்போது வந்தவர்கள். இச்சங்கத்துக்கு பின்னால் ஒரு பெரும் பாரம்பரியம் இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் மரியாதை செய்வது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும். அதற்கு யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் அவர்களுடைய பொருளாதார நிலை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தேவை.

நாங்கள் தேர்தலின் போது நாடக கலைஞர்களை சந்திக்கச் சென்றோம். "என்ன சார் இப்படியெல்லாம் நாடக நடிகர்கள் இருக்கிறார்கள்" என்று மதுரையில் வைத்து கார்த்தி கூறிவிட்டு அழுதுவிட்டார். நாம் இவர்களை ஓட்டாக பார்க்க கூடாது. இவர்களைப் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். நாம் கோடி கோடியாக சம்பாதிக்கிறோம், ஆனால் இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டார். அப்போது நாங்கள் தேர்தலில் தோற்கிறோமா, ஜெயிக்கிறோமா என்பது எல்லாம் தெரியாத போது தோன்றிய திட்டம் தான் இது.

அனைவருக்கும் அனைத்தும் உதவிகளும் போய் சேர வேண்டும் என்றால், அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் வேண்டும். அதற்கு இத்திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும்." என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், நடிகர் சங்கத்தின் அறக்கட்டளைக்கு ரூபாய் 25,000 வழங்கினார். மேலும் "வேலை ஏதும் இல்லாத நடிகர் சங்க உறுப்பினர் ஆன நானே சங்கத்துக்கு நிதி அளிக்கும் போது , மற்ற நடிகர்களும் நிச்சயம் அளிக்கலாம்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT