என் படங்களின் வெற்றியில் விவேக்கின் பெரிய பங்கு உள்ளது என்று இயக்குநர் ஷங்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் உடலுக்கு காலை முதலே பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இயக்குநர் ஷங்கர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"விவேக் சார் எப்போதுமே சிரித்த முகத்துடனே இருப்பார். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். சட்டென்று அவர் இல்லை என்றவுடன் நம்பவே முடியவில்லை. முதன்முதலில் 'பாய்ஸ்' படத்தில் தான் அவருடன் பணிபுரிந்தேன். அந்த மங்கலம் சார் கதாபாத்திரத்தை ரொம்ப அழகாக செய்திருப்பார். பின்பு 'அந்நியன்' படத்தில் சாரி, சிவாஜி படத்தில் ரஜினி சாருக்கு தாய்மாமன் உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை எல்லாம் ரொம்ப சிறப்பாகச் செய்திருப்பார்.
என்னுடைய படங்கள் வெற்றியடைந்ததிற்கு அவருடைய நகைச்சுவை நடிப்புக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அந்தப் படங்கள் எல்லாம் டிவியில் ஒளிபரப்பாகும் போது போன் செய்வார் அல்லது மெசேஜ் அனுப்புவார். "நான் நடித்த 10 முக்கிய கேரக்டர்களில் நீங்கள் 3 கொடுத்துள்ளீர்கள் ரொம்ப நன்றி சார்" என்று சொல்வார். "நீங்கள் அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து, படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததிற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்வேன்" எனக் கூறுவேன்.
இது எனக்கு மிகப்பெரிய இழப்பு. எனக்கு மட்டுமன்றி திரையுலகிற்கே பெரிய இழப்பு. தமிழ்நாட்டுக்கே பெரிய இழப்பு. இன்னும் சொல்லப் போனால் இயற்கைக்கே பெரிய இழப்பு. 'ஜென்டில்மேன்' படத்தில் "மனிதனாகப் பிறந்தால் ஒரு மரத்தையாவது நட்டுவிட்டுப் போகணும். அது 4 பேருக்கு நிழல் கொடுக்கும்" என்று வசனம் வைத்திருப்பேன். அவர் லட்சக்கணக்கான மரங்களை நட்டுவிட்டுப் போயிருக்கிறார். எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார். இன்றைக்கு அவருடைய மறைவுக்கு அந்த லட்சக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும்.
அவர் செய்த நல்ல காரியம் அவருடைய குடும்பத்தைப் பாதுகாக்கும். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்"
இவ்வாறு இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.