விவேக்கின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்று யோகி பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். விவேக்கின் உடலுக்கு யோகி பாபு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:
"விவேக் சாருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடன் குறைவான படங்களில் தான் நடித்தேன். நிறைய அட்வைஸ் செய்தார். அண்ணன், தம்பி மாதிரி பழகினோம். 'அரண்மனை 3', 'பிகில்' ஆகிய படங்களில் அவருடன் நடித்துள்ளேன். அடுத்டுத்து இணைந்து படம் பண்ணுவோம் அண்ணே என்றேன். கண்டிப்பா டா, கதை கேட்டுட்டு இருக்கேன் என்றார்.
நான் பார்த்த தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு காமெடி நடிகரை இன்னொரு காமெடி நடிகர் தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தவர் விவேக் சார். அவருடன் பழகியதால் இதைப் பார்த்துள்ளேன். போகிற போக்கில் மரக்கன்றுகள் நட்டுக் கொண்டு போடா. வரும் காலம் அதைச் சொல்லும்டா என்றார். இன்று நாம் அவரை இழந்துவிட்டோம். அவருடைய இழப்பு மாபெரும் இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்"
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.