'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி முடிவடைந்ததை ஷகிலா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி 2'. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக கனி அறிவிக்கப்பட்டார். தமிழகத்தில் பலரும் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களாக வலம் வருபவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவராக பங்கேற்றார் ஷகிலா. இதில் அவர் சிரிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, "மனதில் அவ்வளவு சோகங்களை வைத்துக் கொண்டு எப்படிச் சிரிக்கிறார்" எனப் பலரும் கருத்து தெரிவித்தார்கள். மேலும், ஷகிலாவுக்கு என்று அந்த நிகழ்ச்சியின் மூலம் புதிய ரசிகர் கூட்டம் உருவானது.
தற்போது 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சி பெற்றதை முன்னிட்டு ஷகிலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:
"வணக்கம், நான் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி முடிந்து இவ்வளவு சோகமாக உணர்ந்ததில்லை. உண்மையில் என் இதயத்தைத் தொட்டுவிட்டது. உங்கள் அனைவருடனும் இனி இருக்க முடியாதது வருத்தமே. எனது ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் விசேஷ நன்றி. அதில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி"
இவ்வாறு ஷகிலா தெரிவித்துள்ளார்.