நடிகர் யோகி பாபு நடித்துள்ள 'மண்டேலா' திரைப்படத்தைத் தடை செய்ய வலியுறுத்தி, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், கரூர் மாவட்ட முடிதிருத்தம் தொழிலாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.
'மண்டேலா' திரைப்படத்தைத் தடை செய்ய வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், கரூர் மாவட்ட முடிதிருத்தம் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில், முடிதிருத்தும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் இன்று (ஏப்.16) மனு அளித்தனர்.
அந்த மனுவில், "மருத்துவர் சமூக மக்களையும், முடிதிருத்தும் தொழிலாளர்களையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் 'மண்டேலா' திரைப்படத்தில் காட்சிகள் அமைத்ததற்காக தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் மற்றும் இயக்குநர் அஸ்வின் ஆகியோரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சாதியை இழிவுபடுத்தும் இந்தத் திரைப்படத்தைத் தடை செய்து தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.