எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் 'பார்டர்' இருந்ததில்லை என்று இயக்குநர் அறிவழகன் பேசியுள்ளார்.
'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நேற்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு 'பார்டர்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இந்தத் தலைப்பு அறிமுகத்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் நடத்தியது படக்குழு. இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் இயக்குநர் அறிவழகன் பேசியதாவது:
''என்னுடைய படைப்பைக் காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாகச் சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதைத்தான் நான் விரும்புகிறேன்.
'ஈரம்', 'குற்றம் 23' படங்களின் வெற்றிக்குப் பிறகு எனக்குக் கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். 'குற்றம் 23' பட வெளியீட்டுக்குப் பிறகு இயக்குநர் ஹரி என்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டியது மறக்க முடியாதது. விநியோகஸ்தர்கள் என்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள்தான் இயக்குநர்களை உற்சாகப்படுத்தும்.
எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் 'பார்டர்' இருந்ததில்லை. அதனால்தான் அவரை வைத்துத் தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. 'குற்றம் 23' படத்திற்குப் பிறகு நான்கைந்து திரைக்கதைகளை எழுதி, படத் தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்கத் திட்டமிட்டேன். ஆனால், பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நடிகரை வைத்து இயக்குநர் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால்தான் சாத்தியமாகிறது. அதுபோன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது''.
இவ்வாறு அறிவழகன் பேசினார்.