தமிழ் சினிமா

இதுவரை நடித்ததில் கடினமான கதாபாத்திரம்: ‘ஜோஜி’ குறித்து ஃபகத் பாசில் பகிர்வு

ஐஏஎன்எஸ்

இதுவரை தான் நடித்ததில் ‘ஜோஜி’ தான் கடினமான பாத்திரம் என்று நடிகர் ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜோஜி’. திலீஷ் போத்தன் இயக்கியுள்ள இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் ஃபகத் பாசிலின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஜோஜி’ கதாபாத்திரம் குறித்துப் பல்வேறு தகவல்களை ஃபகத் பாசில் பகிர்ந்துள்ளார்.

ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''இதுவரை நடித்ததில் கடினமான கதாபாத்திரம் இதுதான். நான் ‘மெக்பெத்’ படித்திருக்கிறேன். அதில் வரும் மெக்பெத் பாத்திரம் பார்ப்பதற்கு வலிமையான பாத்திரம் போலத் தோன்றினாலும் அது மிகவும் நிலையற்ற ஒரு கதாபாத்திரம். இதுதான் அதை நான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்தது. அதன் நிலையற்ற தன்மையைக் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது.

சுயநலமும் குறிக்கோளும் இல்லாத மனிதர் யாரேனும் இருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அனைவரும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு உணர்வு அது. மெக்பெத்தின் அம்சங்களை நான் ஆராய முயற்சி செய்தேன்.

ஒரு கதாபாத்திரமாக ஜோஜியை உள்வாங்க எனக்கு நீண்ட காலம் எடுத்தது. நிச்சயமாக இதுவரை நான் நடித்ததில் கடினமான பாத்திரம் இதுதான் என்று சொல்வேன். திலீஷ் இயக்கத்தில் கடைசியாக நடித்த படத்தில் வரும் பாத்திரத்தை விடக் கடினமானது''.

இவ்வாறு ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT