அசோக் செல்வன், ரித்திகா, வாணி போஜன் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தயாரித்த ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தற்போது பரத், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை எம்.சக்திவேல் இயக்கவுள்ளார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நேற்று (ஏப்.12) இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு கூறியதாவது:
இயக்குநர் சக்திவேல் இந்த கதையை என்னிடம் கூறியபோது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். கதையின் பின்புலமும் கதை நகரும் விதமும் மிகவும் புதிதாக இருந்தது. நகருக்கு வெளியே காற்றாடி ஆலையை சுற்றியே மொத்த கதையும் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முழுத் திரைக்கதையையும் படித்த பின்னே படத்தை தயாரிக்க சம்மதித்தேன். திரைக்கதையை படித்தபோது பல இடங்களில் மிக அழுத்தமான கதையமைப்பும், மர்மமும் கலந்து இருந்தது. படத்தை தயாரிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை திரைக்கதை தந்தது.
பரத் எப்போதுமே தயாரிப்பாளர்களின் நாயகன். வாணிபோஜன் எங்களின் மிகப்பெரும் ஹிட் படமான ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடித்திருந்தார். அற்புதமான நடிகை அவருடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி. இருவருக்கும் சமமான பாத்திரம் படத்தில் உள்ளது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மிக முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்து விரைவில் படப்பிடிப்பை துவக்கவுள்ளோம். தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.
இவ்வாறு டில்லிபாபு கூறினார்.