ரஜினி, கமல், விஜய், அஜித் என பலநாயகர்களை இயக்கிய முன்னணிஇயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மதில்’ திரைப்படம் வரும் 14-ம்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசிய நீண்ட உரையாடலில் இருந்து சிறு பகுதி..
ஓடிடிக்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தீர்களா?
ஓடிடி தளத்தில் எனது முதல் அனுபவம் இப்படம். ஆனால், படப்பிடிப்புகளில் எந்தவித்தியாசமும் இல்லை. வரும் தலைமுறையில் ஓடிடியில் நிறைய படங்கள் வரும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதிலும், இதுபோன்ற காலகட்டத்தில், மக்களுக்கு ஓடிடி தளம்தான் சிறந்த பொழுதுபோக்கு ஊடகமாக இருக்கிறது. அதேநேரம், திரையரங்குகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். கும்பலாக போய்படம் பார்க்க திரையரங்கம்தான் சிறப்பு.வீடுகளில் படம் பார்க்கும்போது இடைஞ்சல்கள் இருக்கத்தான் செய்யும்.
‘மதில்’ படத்தின் கதைக்களம் குறித்து..
5 வயது சிறுவனாக இருக்கும்போது அப்பா மறைந்துவிடுகிறார். ‘இது என் வீடு.பிணத்தை எல்லாம் இங்கு வைக்கக் கூடாது’ என்று, சடலத்தை வெளியே தூக்கிப் போட்டுவிடுகிறார் வீட்டின் முதலாளி. இது சிறுவன் மனதை பாதிக்கிறது. கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து வீடு கட்டுகிறார். இப்படிப்பட்ட சூழலில், அவரது அனுமதி இல்லாமல் வீட்டு சுவரில் அரசியல் விளம்பரம் செய்வதால் பிரச்சினை வருகிறது. அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதாக கதை நகரும்.
‘நான் கட்டியுள்ள வீட்டுக்கு பிரச்சினை..’ என்று முகநூலில் நீங்கள் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ வைரலானதே..
அது, ‘மதில்’ பட விளம்பரத்துக்காக கடந்த நவம்பரில் எடுத்த வீடியோ. திடீரென அதை எனக்கு அனுப்பி, உங்கள் தளத்திலேயே போடுங்களேன் என்றவுடன் போட்டுவிட்டேன். அது இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. ‘இப்படி பண்ணாதீர்கள். நிஜமாகவே பிரச்சினை என்று வீடியோ போட்டால்கூட விளம்பரம் என நினைத்துவிடுவார்கள்’ என்றனர். மறுநாளே விளக்கம் கொடுத்துவிட்டேன்.
கரோனா நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டது பற்றி..
படப்பிடிப்பு இடங்கள் முழுவதையும் சுத்தம் செய்வது, அனைவருக்கும் முகக்கவசம், அனைவர் கையிலும் சானிடைசர் பாட்டில்கள் என படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் சுடுதண்ணீரில் குளித்துவிட்டு, ஸ்டீம் செய்துகொள்வேன்.
நடிகராக பிஸியாக இருக்கிறீர்கள். எப்போது மீண்டும் இயக்கம்?
நான் எப்போதுமே ரெடி. தெலுங்கு,கன்னடத்தில் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தேன். இப்போது கரோனா நேரம் என்பதால் பண்ணவில்லை. இதர மொழிகளில் அழைக்கிறார்கள். கரோனா நேரம் என்பதால் வேண்டாம் என்று இருக்கிறேன்.
கரோனா பொது முடக்கத்தின்போது உங்கள் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டது ஏன்?
50 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு படத்தின் கதை. அதை காலத்துக்கேற்ப மாற்றி எடுக்கலாம் என்று தொடங்கினோம். திரைக்கதை சுவாரசியமாக வராததால், வேறு கதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
கரோனா அச்சுறுத்தலால் கதைகள் உருவாக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
கரோனாவுக்காக கதையை சுருக்குவதோ, ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதோ என்பதெல்லாம் இல்லை. சின்ன படங்கள் எப்போதுமே குறுகிய வட்டத்தில்தான் செய்வார்கள். பெரிய படம் என்றால், கரோனாவுக்காக கதையை எல்லாம் மாற்றமாட்டார்கள். நடுவில் சற்று குறைந்திருந்த கரோனா பயம், தற்போது 2-வது அலையால் மீண்டும் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அதோடும் வாழப் பழகிவிடுவோம்.
நீங்கள் முதன்முதலில் இயக்கிய ‘புரியாத புதிர்’ மட்டுமே த்ரில்லர். அதற்கு பிறகு, ஒரேயடியாக குடும்பப் பாங்காக மாறியது ஏன்?
‘புரியாத புதிர்’ ரசிக்கப்பட்ட அளவுக்கு,கமர்ஷியல் வெற்றி இல்லை. அதற்கு பிறகு இயக்கிய ‘சேரன் பாண்டியன்’ படம் பெரிய ஹிட். தொடர்ந்து கமர்ஷியல் படங்களே நிறைய வந்தன. தவிர, பெரியநடிகர்கள் த்ரில்லர் கதையை விரும்பவில்லை. எனக்கும் அதுபோன்ற கதை மறுபடியும் அமையவில்லை.
மீண்டும் ரஜினி படம் இயக்கப்போகிறீர்கள் என்ற செய்தியை காண முடிகிறது. அது எப்போது?
யாருடன் படம் பண்ணப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. திடீரென்று ஒருநாள் அதுவாக அமையும். அப்படித்தான் எல்லா படங்களும் அமைந்தன. ரஜினி, கமல்உள்ளிட்ட அனைவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும், நான் போய், படம் பண்றேன் என்று கேட்க மாட்டேன். இந்த மாதிரி கதையை இயக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்றால்அவர்களே அழைப்பார்கள். எனவே, அது அமையும்போது அமையும்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?
வராமல் போய்விட்டாரே என்ற வருத்தம் எனக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்குஇருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படுவது, அவர்களுக்காக குரல் கொடுத்தது, அரசை எதிர்த்து பேசியது, அறிக்கைகள் வெளியிடுவது என நிறைய விஷயங்கள் செய்தார் ரஜினி. அரசியல் பற்றி பேசினாலே ‘அதை விடுங்கள்’ என்று சொன்னகமல், அரசியல் களத்துக்கு வந்துவிட்டார். ரஜினி பின்வாங்கிவிட்டார். அவர் வந்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும்.
அதேநேரம், ஏன் வரவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணத்தை அனைவருமே ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.