'சுல்தான்' விமர்சனம் தொடர்பாக விமர்சகர்களுக்கு எடிட்டர் ரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, நெப்போலியன், லால், ராஷ்மிகா மந்தனா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மே 2-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இதனைத் தொடர்ந்து 'சுல்தான்' படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்தி படப்பிடிப்பில் இருந்ததால் ராஷ்மிகா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவர் தவிர்த்து மீதி அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் எடிட்டர் ரூபன் பேசியதாவது:
'' 'சுல்தான்' படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன, குறைக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் சொன்னார்கள். அதனால் குறைத்து வெளியிட்டோம். ஆனால், படம் வெளியானவுடன்தான் வன்முறை அதிகமாக இருந்தது.
சில விமர்சகர்கள் உபயோகித்த வார்த்தைகளில் வன்முறை மிக அதிகமாக இருந்தது. சில பேர் மட்டுமே. அது ரொம்பவே காயப்படுத்தியது. அதை எப்படி எடிட் செய்து நீக்குவது என்று தெரியவில்லை. இன்றைக்கு திரையரங்கிற்கு வந்து சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
இந்தத் தருணத்தில் எனக்கொரு வேண்டுகோள். எனக்கு எனது அம்மாவைப் பிடிக்கும் அளவுக்கு சினிமாவையும் பிடிக்கும். எங்க அம்மா எப்படி நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேனோ, அதேபோல் சினிமாவும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வார்த்தைகளில் வன்மத்தைக் குறைத்துக்கொண்டு குறைகளைச் சொல்லுங்கள். குறைகளையே சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ரொம்ப எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் அடியுங்கள். ஆனால், கையைக் கழுவிவிட்டு அடியுங்கள் என்றுதான் சொல்கிறேன்".
இவ்வாறு எடிட்டர் ரூபன் பேசினார்.