சர்ச்சைகளைத் தவிர்க்க 'கர்ணன்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட வேண்டாம் எனப் படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இதற்கே இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேசமயம் சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. பண்டாரத்தி என்ற பாடலால் உருவான சர்ச்சையால், அதனை மஞ்சனத்தி என மாற்றிவிட்டது படக்குழு.
'கர்ணன்' என்ன மாதிரியான கதைக்களம் என்பது குறித்துப் படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை. ட்ரெய்லரில் தெரிந்துவிடும் என்று பலரும் கருதினார்கள். ஆனால், படக்குழுவினரோ ட்ரெய்லரே வேண்டாம், நேரடியாக வெளியீட்டுக்குச் செல்வோம் என முடிவெடுத்துள்ளனர்.
இதுவரை உள்ள எதிர்பார்ப்பு போதும். ட்ரெய்லர் வெளியிட்டால் அதன் மூலம் ஏதேனும் சர்ச்சைகள் உருவானால் நன்றாக இருக்காது என்பதால் இந்த முடிவைப் படக்குழு எடுத்துள்ளது.