தமிழ் சினிமா

மோகன்லால் இயக்கத்தில் அஜித்?

செய்திப்பிரிவு

மோகன்லால் இயக்கி வரும் 'பரோஸ்' படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'பரோஸ்'. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது. நேற்று (மார்ச் 31) கொச்சியில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், இசையமைப்பாளராக லிடியன் நாதஸ்வரம் பணிபுரியவுள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்னணி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன. அனைத்து மொழிகளிலும் 'பரோஸ்' படம் வெளியாக இருப்பதால், இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த போது, "இதுவரை யாருமே அணுகவில்லை. ஆகையால் இந்தச் செய்தி வெறும் வதந்தி தான்" என்று தெரிவித்தார்கள். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். அதனைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT