'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் விஜய்யை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'கே.ஜி.எஃப்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது 'கே.ஜி.எஃப் 2' பணிகளை முடித்துவிட்டு, பிரபாஸ் நடித்து வரும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தை 'கே.ஜி.எஃப்' படத்தைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், சில பாலிவுட் ஊடகங்கள் பிரசாந்த் நீல் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் எனவும், அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாகவும் செய்தி வெளியானது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரான தில் ராஜு இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக விசாரித்தபோது, "இன்றுதான் நெல்சன் படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார் விஜய். அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. சிலர் கதைகள் கூறியிருப்பது உண்மை. அதில் பிரசாந்த் நீல் இல்லை. இருவருக்குமான சந்திப்பு கூட நடக்கவில்லை. ஆகையால், இந்தச் செய்தி வெறும் வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.