தமிழ் சினிமா

இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவம்

செய்திப்பிரிவு

கோவாவில் இன்று கோலாகலமாக தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில், இசைத்துறையில் சாதித்த, இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் திரை இசையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது அரங்கில் இருந்த ஒட்டுமொத்த திரைபிரபலங்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதனால் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பேசிய இளையராஜா, ‘‘உலகம் முழுவதும் இன்று வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும். இசையால் வன்முறை எண்ணங்கள் எழுவதை தடுக்க முடியும்’’ என்றார்.

விழாவில் ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர் நிகிதா மிக்கல்கோவ்வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் பங்கேற்று, 1989-ம் ஆண்டு ஹிட்டாக ஓடிய ‘மை நேம் இஸ் லக்கான்’ திரைப்பட பாடலுக்கு நடனமாடி அரங்கை அதிரவைத்தார்.

SCROLL FOR NEXT