'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம், முழுக்க காமெடி பின்னணியில் உருவாக இருக்கிறது.
'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படத்துக்கான செய்திகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இச்செய்திகள் அனைத்துக்கும் 'தூங்காவனம்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'சீக்கட்டி ராஜ்ஜியம்' பத்திரிகையாளர் சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்தார் கமல்.
அமலா, ஷரினா வகாப் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவிருக்கும் அப்படத்தை இயக்க இருக்கிறார் ராஜீவ் குமார். இன்னொரு நாயகியும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார், அதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது.
ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் நடைபெற இருக்கிறது. மொத்தமாக 50 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு இருக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
'அவ்வை சண்முகி', 'பஞ்ச தந்திரம்' போன்ற கமலின் நகைச்சுவை படங்கள் பாணியில் உருவாக இருக்கும் இப்படத்துக்கு கமல் திரைக்கதை எழுதி இருக்கிறார். நகைச்சுவை பின்னணியில் ஒரு சமூகத்துக்கு தேவையான கதையாகவும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படமாகவும் இருக்கும் என்கிறது படக்குழு.