மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் 'குற்றமே தண்டனை' மற்றும் 'விசாரணை' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'விசாரணை'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் நெகட்டிவ் உரிமை எனப்படும் ஒட்டுமொத்த உரிமைகளையும் லைக்கா நிறுவனம் பெற்றிருக்கிறது.
'காக்கா முட்டை' படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'குற்றமே தண்டனை'. வித்தார்த், ஐஸ்வர்யா, நாசர், ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்திருக்கிறார்.
இவ்விரண்டு படங்களுமே மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. இப்படங்களைப் பார்த்தவர்கள், இரண்டையுமே வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.
'குற்றமே தண்டனை' திரையிடலுக்குப் பிறகு பேசிய இயக்குநர் மணிகண்டன், "'குற்றமே தண்டனை' முழுப் படப்பிடிப்பையும் 34 நாட்களில் முடித்துவிட்டேன். 'காக்கா முட்டை' படத்தின் சாயல் கூட இப்படத்தில் இருக்காது. 'காக்கா முட்டை' மாதிரியான இன்னொரு படம் யாருமே கட்டாயப்படுத்தாமல் அதுவாகவே நடக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 'காக்கா முட்டை' மாதிரியான படங்களே செய்ய முடியாது. ஒரு இயக்குநர் வெவ்வேறு களங்களில் பயணிக்க வேண்டும். அந்த வகையில் எனது இன்னொரு படம் தான் 'குற்றமே தண்டனை'" என்று தெரிவித்தார்.
'விசாரணை' திரையிடல் முடிந்ததும், பார்த்தவர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கைத்தட்டி வெற்றிமாறனுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு மத்தியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "படம் சென்சார் செய்யப்பட்ட பின், நீங்கள் பார்த்தவை எல்லாம் இருக்காது. திரையரங்குகளில் வெளியாகும் படத்தில் நிறைய வார்த்தைகள் நீக்கப்பட்டு, பின்னணி இசை ஆக்கிரமிக்கும்" என்றார்.
'விசாரணை' பார்த்தவர்கள் தங்களுடைய கருத்துக்களில் "'விசாரணை' படம் பார்த்த பிறகு பேச்சுவரவில்லை. இந்த வருடத்தின் சிறந்த படமாக இருக்கும். சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இவ்விரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், தங்களது படங்களை டிசம்பரில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.