வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிக்க 'பொட்டு' என பெயரிடப்பட்டு பேய் படம் ஒன்று தயாராக இருக்கிறது.
ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிப்பில் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் படம் 'சவுகார்பேட்டை'. ஜான் மேக்ஸ் மற்றும் ஜோன்ஸ் இருவரும் தயாரித்திருக்கும் இப்படத்தை வடிவுடையான் இயக்கி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வரும் பேய் படங்களின் வரிசையில் 'சவுகார்பேட்டை' படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் திருப்திகரமாக நடைபெற்றுள்ளதால், இயக்குநர் வடிவுடையானுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.
தற்போது மீண்டும் ஒரு பேய் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவுடையான். இப்படத்தின் நாயகனாக பரத் ஒப்பந்தமாக இருக்கிறார். நாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார்.
இம்மாதம் தொடங்கவிருக்கும் இப்படத்துக்கு 'பொட்டு' என பெயரிட்டு இருக்கிறார்கள். மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஒரு பேய்க்கதையை உருவாக்க இருக்கிறார்கள்.