தமிழக வெள்ள நிவாரணத்துக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ரூ.25 லட்சம், விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-ல் தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுப்பெற்று கடந்த 10-ம் தேதி கடலூர் அருகே கரையைக் கடந்தது.
இதனால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தானே புயலுக்குப் பிறகு கடலூர் கடுமையாக பாதிக்கப்பட்டது. விளை நிலங்கள், பயிர் சேதம், வீடுகள் சேதம், பொருட்கள் இழப்பு என பலத்த சேதம் ஏற்பட்டது.
சென்னையில் வில்லிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக சூழ்ந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய சராசரியான 44 செ.மீ மழையளவையும் கடந்து இந்த ஆண்டு இதுவரை 48 செ.மீ. மழை பெய்துள்ளது. மழைக்கு 180-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அரசும், எதிர்க்கட்சிகளும், பல தன்னார்வ அமைப்புகளும் மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.
ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் நபர்களே ஒரு நாள் சம்பளம் கொடுக்க முன்வரும்போது, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஏன் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை? என்று சமூக வலைதளங்களில் பலரின் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர்கள் நிதியுதவி அளிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
"தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.25 லட்சம் காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் ஒப்படைத்தார் நடிகர் சூர்யா.
மேலும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் 10 லட்சம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் வழங்கினார். இந்தத் தொகையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட உள்ளது" என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நடிகர் சங்கத்திடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நடிகர் தனுஷ் வழங்கியுள்ளார்.