தமிழ் சினிமா

ஸ்ரீதேவி புகார் சரியானதா?- புலி தயாரிப்பு தரப்பு பட்டியல்

செய்திப்பிரிவு

'புலி' படத்துக்காக ஸ்ரீதேவி அளித்துள்ள சம்பள புகார் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக 'புலி' பட தயாரிப்பு நிறுவனங்கள் சிபு தமின்ஸ், எஸ்கேடி ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்ரீதேவி மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக ஸ்ரீதேவிக்கு நாங்கள் சம்பள பாக்கி வைத்துள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார் என்று வெளியான செய்திகளைக் கண்டு வேதனை அடைந்தோம். அந்த புகாருக்கு பதில் கூற வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

'புலி' படத்தில் ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்ய 2.70 கோடியும், சேவை வரிக்கு 30 லட்சம் என மொத்தம் 3 கோடி சம்பளம் பேசியிருந்தோம். பேசியபடி சம்பளமும் கொடுத்து வந்தோம்.

ஆனால், படப்பிடிப்பு முடியும் தருவாயில் 'புலி' படத்தை தெலுங்கு, இந்தியில் டப்பிங் செய்தால் கூடுதல் பணம் தர வேண்டும் என்று ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் கோடிக்கணக்கில் பணம் கேட்டார்.

மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகும் படங்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் உள்ளது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட யாருமே இப்படி கூடுதல் பணம் கேட்கவில்லை என்று விளக்கினோம்.

ஆனால், இதை போனிகபூர் ஏற்றுக்கொள்ளவில்லை. கூடுதல் பணம் கொடுத்தால்தான் ஸ்ரீதேவி ஷூட்டிங் வருவார் என்று சொல்லிவிட்டார்.

ஷூட்டிங் தடைபடக்கூடாது என்பதற்காக தெலுங்கு டப்பிங்கின்போது ரூ.15 லட்சமும், இந்தியில் டப்பிங் பேச இந்தி சாட்டிலைட் பணத்தில் 20% தருவதாக ஒப்புக்கொண்டோம்.

ஆனால், இதை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எதிர்த்தனர். இது வியாபார முறையில் இல்லாத ஒன்று என்று கூறினார்கள்.

இந்தி சாட்டிலைட் உரிமையை மனீஷுக்குக் கொடுத்தோம். அதிலிருந்து 20% பணமாக 55 லட்சம் பணத்தை ஸ்ரீதேவி சார்பில் போனிகபூர் வாங்கினார். நாங்கள் பேசியபடி சம்பளம் கொடுத்துவிட்டோம்.

இந்தியில் 'புலி' படத்தை ரிலீஸ் செய்யுங்கள். ஸ்ரீதேவிக்கு நல்ல மார்க்கெட் உள்ளது என்று போனிகபூர் சொன்னார். அதனால் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து இந்தியில் 'புலி' படத்தை ரிலீஸ் செய்தோம். ஆனால், ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வரவில்லை.

'புலி' படத்துக்கு நாங்கள் 3 காஸ்டியூம் டிசைனர்களை நியமித்து இருந்தோம். ஆனால், ஸ்ரீதேவி மனிஷ் மல்ஹோத்ராதான் காஸ்டியூம் டிசைனராக வேண்டும் என்று கேட்டார். அவரை நியமித்ததால் 50 லட்சத்துக்கும் மேல் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்தியில் மார்க்கெட்டிங் டிசைனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி சொன்னார். அதையும் செய்து ரூ.8 லட்சம் சம்பளம் கொடுத்தோம்.

இப்படி கோடிக்கணக்கில் செலவு செய்த படத்தின் தெலுங்கு, இந்தி ஆடியோ வெளியீட்டுக்கு நடிகர் நடிகைகள் வருவது வழக்கம். ஆனால், ஸ்ரீதேவி வரவில்லை.

'புலி' படத்தால் எங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் கூடுதல் கால்ஷீட் தந்தார். ஆனால், அடுத்தடுத்து படம் வெளியாகும் நாள் மாறிக்கொண்டே இருந்ததால் எங்களுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வரிவிலக்கு கிடைக்கவில்லை. இதனால் 4.5 கோடி இழப்பு ஏற்பட்டது. படம் வெளியாகும் தருணத்தில் வருமான வரித் துறை சோதனை நெருக்கடி தந்தது.

எனவே, எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும், நஷ்டத்தையும் மனதில் கொண்டு இந்த பிரச்சினை சுமுகமாக முடிய வேண்டுகிறோம்.

ஸ்ரீதேவியிடம் பேசிய சம்பளம் கொடுத்துவிட்டோம். கூடுதல் பணம் மட்டும் தரமுடியவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சூழலை உணர்ந்து உதவிய அத்தனை பேருக்கும் நன்றி'' என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT