'கதகளி' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களையும், பொங்கல் அன்று வெளியிட, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு பேய்ப் படம் தயாரானாலும், அதன் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுவது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கம். தற்போது ‘சவுகார்பேட்டை’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘உறுமீன்’ ஆகிய படங்களை டிசம்பரில் வெளியிட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கி, தயாரித்த ‘அரண்மனை 2’ படத்தின் தமிழக உரிமையை முன்பே கைப்பற்றி பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்திருந்தது. இப்படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தற்போது, விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த ‘கதகளி’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கத்ரீன் தெரசா, கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர், இரண்டு படங்களையும் ஒரே தேதியில் வெளியிட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த பொங்கல் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம். ‘கதகளி’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய இரண்டு அற்புதமான படங்களை வெளியிட இருக்கிறோம். இது ஸ்ரீதேனாண்டாள் பொங்கல் " என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.