ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரத்தில், தயாரிப்பாளர் தாணு அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று பிரச்சினை எழுப்ப படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டு இறுதியில் அந்நிறுவனம் தயாரிப்பில் இருந்து விலகியது.
ஐங்கரன் விலகலைத் தொடர்ந்து சில தயாரிப்பு நிறுவனங்களுடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியாக 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்க முன் வந்தார்.
ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு தொடங்கப்படாததால் காஜல் அகர்வால், பிந்து மாதவி இருவருமே விக்ரம் படத்தில் இருந்து விலகினார்கள். தற்போது, நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். பிந்து மாதவி வேடத்தில் நடிக்க நித்யா மேனன் மற்றும் பார்வதி மேனன் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
மேலும், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து மலேசியாவில் படப்பிடிப்புத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் இரண்டு கெட்டப்களில் தோன்றவிருக்கும் விக்ரமுக்கு ஒரு கெட்டப்புக்காக மட்டும் வெளிநாட்டு ஒப்பனைக் கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
'மர்ம மனிதன்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பது குறித்து விசாரித்த போது, அத்தலைப்பு மட்டுமன்றி வேறு 2 தலைப்புகளையும் படக்குழு பரிசீலனையில் வைத்திருப்பதாகவும் விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.