தமிழ் சினிமா

'டாக்டர்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

'டாக்டர்' திரைப்படம் ரம்ஜான் விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'டாக்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என 'டாக்டர்' படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

தற்போது மார்ச் 26-ம் தேதிக்குப் பதிலாக ரம்ஜான் விடுமுறைக்கு 'டாக்டர்' வெளியாகும் என கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"புதிய வெளியீட்டுத் தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம். டாக்டர் வருண் மற்றும் குழுவினரைத் திரையரங்குகளில் ரமலான் பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தை எங்களது டாக்டரை மெருகேற்றப் பயன்படுத்த உள்ளோம். நீங்கள் தவறாமல் மறக்காமல் வாக்களிக்கவும். நினைவிருக்கட்டும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. திரையரங்குகளில் சந்திக்கலாம்"

இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'டாக்டர்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது 'டான்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

SCROLL FOR NEXT