ஆர்யா, சாயிஷா 
தமிழ் சினிமா

நாயகி கதையில் சாயிஷா: நடிகர் ஆர்யா நேர்காணல்

கா.இசக்கி முத்து

இந்த உலகத்தில் டெடிபொம்மையை பிடிக்காதவர்களே கிடையாது. படத்தில், அந்தபொம்மை பேசுவது, சண்டைபோடுவது, நடப்பது என விதவிதமாக செய்யும்போது பார்வையாளர்கள் ஒன்றிவிடுவார்கள். அதுதான் ‘டெடி’ படத்தின் சிறப்பு.. என்று தொடங்கினார் ஆர்யா. ஓடிடியில் வெளியாக உள்ள ‘டெடி’ படம் குறித்து அவருடன் பேசியதில் இருந்து..

‘டெடி’ படத்தின் மிகப்பெரிய சவால்?

டெடியாக நடிப்பதுதான். அதில் கோகுல் என்பவர் நடித்துள்ளார். டெடிக்கான உடைகளை போட்டு தைத்துவிடுவார்கள். அதை அணிந்துகொண்டு ஒரு நிமிடம்கூட உட்கார முடியாது. மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர்தான் படத்தின் நிஜ கதாநாயகன். ஆனால், அவரது முகம் படத்தில் வராது. டெடி முகம்தான் தெரியும்.

திருமணத்துக்கு பிறகு சாயிஷாவுடன் நடித்த அனுபவம்..

எனக்கு புதிதாக ஒன்றும் தெரியவில்லை. வீட்டில் பேசுவதுபோலத்தான் படப்பிடிப்பு தளத்திலும் பேசிக்கொண்டு இருந்தோம். இந்த படத்துக்கு சாயிஷாவை நான் சிபாரிசு செய்யவில்லை. அவர் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் சக்தி சவுந்தரராஜன்தான் சொன்னார்.

படம் ஓடிடியில் வெளியாவது குறித்து..

அதில் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டுமே இருக்கிறது. இப்போதுள்ள சூழலால்தான் ஓடிடியில் வெளியிடுகிறோம். அடுத்தபடங்களான ‘சார்பட்டா’, ‘அரண்மனை-3’, ‘எனிமி’ ஆகியவை முதலில் திரையரங்கில்தான் வெளியாகும். பிறகு ஓடிடியில் வரும்.

சமூக வலைதளத்தில் பட விளம்பரத்தைவிட, உடற்பயிற்சி சம்பந்தமான விஷயங்களை அதிகம் பகிர்வது ஏன்?

அதுதான் என் வாழ்க்கை. நான் ஒரு விளையாட்டு வீரன் ஆகியிருக்க வேண்டும் என்று என் மனைவி சொல்லிக்கொண்டே இருக்கிறார். 3-ம் வகுப்பில் இருந்து மைதானத்தில் ஆடி வருகிறேன். உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் இருந்ததால் என்னை போலவே சிந்திக்கும் சிலரது நட்பு கிடைத்திருக்கிறது. அவர்கள் உடனான நட்பு, நாங்கள் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி எல்லாம் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கிறது.

சக நாயகர்கள் எல்லாம் இயக்குநர் ஆகிவிட்டார்கள். ஆர்யா எப்போது?

இயக்குநர் பொறுப்பு கடினமானது. அதற்கென்று ஒரு மனப்பக்குவத்துடன் தயாராக வேண்டும். அந்த பக்குவம் இப்போதைய சூழலில் எனக்கு வராது.

சாயிஷா அடுத்து என்ன செய்கிறார்?

ஏதோ சில படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சாயிஷாவுக்கு இல்லை. நல்ல கதாபாத்திரம், கதை வந்தால் நடிக்கலாம் என்று இருக்கிறார். அதனால்தான், நிறைய வாய்ப்புகள் வந்தபோதிலும், ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். சாயிஷாவை வைத்து நாயகியை மையப்படுத்திய கதை தயாரிக்கும் எண்ணம் எனக்கு இருக்கிறது.

SCROLL FOR NEXT