தமிழ் சினிமா

அர்னால்டு நிபந்தனை: எந்திரன் 2-ல் ஷங்கருக்கு பின்னடைவு

ஸ்கிரீனன்

இயக்குநர் ஷங்கருக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு விதித்த நிபந்தனையால், 'எந்திரன் 2'-வில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

'எந்திரன் 2' படத்துக்காக இயக்குநர் ஷங்கர் முழுவீச்சில் முதற்கட்ட பணிகளில் பணியாற்றி வருகிறார். ரஜினி நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியோடு நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ள காட்சிகளுக்கான முன் வேலைகள் என பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இப்படத்தில் ரஜினியோடு, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர். எத்தனை நாள் படப்பிடிப்பு, சம்பளம் உள்ளிட்ட விஷயங்களைத் தொடர்ந்து, படத்துக்கான உடைகள் மற்றும் மேக்கப் ஆகியவை எப்படியிருக்கும் என தயாராகியிருக்கிறார் அர்னால்ட்.

விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கும் ஷங்கர், அர்னால்டிடம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடித்தவுடன், அர்னால்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது ஷங்கரிடம் ஹாலிவுட்டில் இருக்கும் திரைக்கதை அமைப்பினரோடு இணைந்து 'எந்திரன் 2' படத்துக்கான திரைக்கதையை மாற்றி அமைக்கும்படி தெரிவித்திருக்கிறார் அர்னால்டு. அவ்வாறு மாற்றும் திரைக்கதை அமைப்பு தனக்கு பிடிக்கும் பட்சத்தில் மட்டுமே ஒப்பந்தமாவதாகவும் ஷங்கரிடம் தெரிவித்திருக்கிறார் அர்னால்டு.

அர்னால்டில் இந்த திடீர் நிபந்தனை, இயக்குநர் ஷங்கருக்கு சற்றே பின்னடைவு தந்திருக்கிறது. இறுதியில் ஷங்கர் என்ன முடிவு செய்யவிருக்கிறார் என்பது தான் படக்குழுவினரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT