இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' படத்துக்குப் பிறகு, தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ராஜேஷ். முழுக்கதையையும் முடித்தவுடன் ஜி.வி.பிரகாஷை சந்தித்து தெரிவித்திருக்கிறார்.
கதையைக் கேட்டு மிகவும் பிடித்துவிடவே, உடனே நாயகனாக நடிப்பதாக முடிவு செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது 'ப்ருஸ்லீ', சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜேஷ் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கி இருக்கின்றன. இப்படத்தைத் தயாரிக்க 3 தயாரிப்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் தயாரிப்பாளர் யார், ஜி.வி.பிரகாஷ் உடன் நடிப்பது யார் உள்ளிட்ட விஷயங்களை முறையாக அறிவிக்க இருக்கிறார்கள்.