'கபாலி' படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என்று படக்குழு சார்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ருத்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார். சென்னையைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறும் போது, அங்கு ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்தார்கள். ஒவ்வொரு நாளும் ரஜினி படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என வந்து கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என்று ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா உள்ளிட்ட பலர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மேலும், 'கபாலி'யில் ரஜினியோடு நடித்துவரும் கலையரசன் "அனைவருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள். குறிப்பாக, ரஜினிகாந்தின் மலேசிய ரசிகர்களுக்கு இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். ரஜினிகாந்துடன் நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை இணையதளத்தில் இப்போதைக்கு பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
’கபாலி’ திரைப்படம் வெளியான பிறகு அவற்றை நீங்கள் பகிர்ந்தீர்கள் என்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். அதுவரை அவற்றை உங்கள் நினைவில் நிறுத்தி மகிழுங்கள். இப்போதே ரஜினிகாந்த் புகைப்படங்களை நீங்கள் பகிர்ந்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும். ரஜினிகாந்தின் கெட்டப் என்னவென்ற ஆவலுடன் படத்துக்குச் சென்று, அதை பெரிய திரையில் பார்த்து ஆரவாரம் செய்யும் மகிழ்ச்சி குறைந்துவிடும்.
இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் கடும் உழைப்பைக் கொடுத்துள்ளார். எனவே தயவு செய்து உங்கள் ஆதரவைத் தாரீர். ’கபாலி’ திரைப்படத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம். நமது பெருமைமிகு நடிகர் ரஜினிகாந்தை மதித்து அவருக்கான தனிப்பட்ட சுதந்திரத்தை அளிப்போம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.