தமிழ் சினிமா

தனது அடுத்த தயாரிப்பை அறிவித்த விக்னேஷ் சிவன்

செய்திப்பிரிவு

தான் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

முன்னணி இயக்குநராக விக்னேஷ் சிவன், 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக, நயன்தாரா நடித்து வரும் 'நெற்றிக்கண்' படத்தைத் தயாரித்து வருகிறார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து 'ராக்கி' மற்றும் 'கூழாங்கல்' ஆகிய படங்களின் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதில் 'கூழாங்கல்' திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைக் குவித்து வருகிறது.

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தினை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படங்களைத் தொடர்ந்து, புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை வி.விநாயக் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் தலைப்பை அனிருத், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் மேனன் இணைந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்தப் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT