மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.
மீண்டும் எப்போது ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க 'அண்ணாத்த' படக்குழு முடிவு செய்துள்ளது.
முதலில் வட மாநிலத்தில் சில முக்கியமான காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டது படக்குழு. அவை அனைத்தையும் ஹைதராபாத்திலேயே படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த தகவலினால் ரஜினி உடல்நிலை சீராகி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி நடிக்கவுள்ள படம் என்ன என்பது விரைவில் தெரியவரும்.