இன்னும் கடன் பிரச்சினை நீடித்து வருவதால், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரஜினி முருகன்' திரைப்பட வெளியீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன்.ராம் இயக்கி இருக்கும் படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
ஈராஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கொடுத்துவிட்டதால், இப்படம் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனம், "உங்களுடைய கடன் பிரச்சினைகளை முடித்துவிடுங்கள், நாங்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வெளியிட்டு தருகிறோம்" என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தது.
'ரஜினி முருகன்' படத்தை டிசம்பர் 4ம் தேதி வெளியிடலாம் என்ற முயற்சியில் இறங்கியது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். ஆனால், 'பசங்க 2', 'சவுகார்பேட்டை', 'ஈட்டி' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் சரிவர திரையரங்குகள் கிடைக்கவில்லை.
மேலும், இன்னும் சில பைனான்சியர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு வெளியிடுங்கள் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் புதிதாக உருவாகியிருக்கும் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் 'ரஜினி முருகன்' படத்தின் உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கடன் தொகையை கேட்டுவிட்டு பின்வாங்கிவிட்டது.
படத்தை தற்போது டிசம்பர் 11ம் தேதி வெளியிட முயற்சி செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியானாலும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கடன் பிரச்சினைகள் முடியும் வரை 'ரஜினி முருகன்' வெளியாவது மிகவும் கடினம் என்கிறார்கள்.
இப்படம் வெளியாவதற்கு சிவகார்த்திகேயன் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்துவிட்டு, முடியாமல் போனதால் தனது அடுத்த படத்தில் மும்முரமாகி விட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.