ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு வருந்துவதாக மலேசியாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. தற்போது மலேசியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் மலாகா நகரில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. தற்போது பாடல் ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், ரசிகர்களோடு புகைப்படம் எடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கோருவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், "மலேசியாவில் ஒவ்வொரு ரசிகருடனும் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அனைவருமே என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
ஆனால், ஒவ்வொருவருடனும் தனியாக புகைப்படம் என்பது முடியாத ஒன்று என அனைவருக்குமே தெரியும். மலேசியாவில் உள்ள ரசிகர்கள் இவ்வளவு மென்மையானவர்கள் என நான் நினைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் ரஜினி.