'நையப்புடை' என்ற படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக நடிக்க இருக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்
'கபாலி', 'விஜய் - அட்லீ' என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களைத் தயாரித்து வருபவர் தாணு. தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நாயகனாக வைத்து 'நையப்புடை' என்னும் படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இன்னொரு நாயகனாக பா.விஜய், நாயகியாக சாந்தினி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், 'நான் கடவுள்' ராஜேந்திரன், விஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
தவறுகளைக் கண்டு கோபப்படும் 70 வயதுக்காரராக எஸ்.ஏ.சி நடித்து வருகிறார். பா.விஜய் இளம் பத்திரிகையாளராகவும், ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் போலீஸ் அதிகாரியாகவும், விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை புதுமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்குநர். தாஜ்நூர் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் குறித்து தாணு, "ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லியிருக்கும் படம் தான் 'நையப்புடை' இயக்குநர்கள் பவித்ரன்,ஷங்கர், ராஜேஷ், பொன்ராம் இவர்களைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் இயக்குநர் விஜய்விக்ரம்.
ஒரே நேரத்தில் மகன் விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் நாயகனாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம்" என்று தெரிவித்திருக்கிறார்.