‘‘திரையரங்கில் பார்க்கும் சந்தோஷம் ஓடிடியில் கிடைக்காது,’’ என நடிகர் ஜீவா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ‘களத்தில் சந்திப்போம்’ படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கபடி போட்டியில் சிறப்பு விருந்தினராக அத்திரைப்படத்தின் கதாநாயகன் ஜீவா பங்கேற்றார்.
தொடர்ந்து சத்தியன் திரையரங்கில் ரசிகர்களுடன் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தைப் பார்த்து ரசித்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த காலக்கட்டத்தில் ஒரு நபரை திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய விஷயமாக உள்ளது. நடிகர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியை வெளிச்சம் போட்டு காட்டும் இடமாக திரையரங்கு உள்ளது.
எந்தவொரு படமும் முதலில் திரையரங்கில் தான் வெளியிடப்பட வேண்டும். பெரிய திரையில் பார்க்கும்போது தான் அதன் பிரம்மாண்டத்தை அனுபவிக்க முடியும். ஓடிடியில் அந்த சந்தோஷம் கிடைக்காது.
கரோனாவுக்கு பிறகு நடிகர்கள் பிசியாகி உள்ளனர். நடிகர்களின் தேதி கிடைப்பதில்லை. பழைய நிலைக்கு சினிமாக மாறி வருகிறது. திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பது சந்தோஷம்.
பாரம்பரிய உணவு, வாழ்க்கை முறை தான் நம்மை நோயில் இருந்து காத்து நன்றாக வைத்திருக்கிறது, என்று கூறினார்.