நான் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன்; நல்லது செய்தால் தட்டிக்கொடுப்பேன் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கோபி இயக்கத்தில் தினேஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. தீப்தி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, ராமா, கதிர், செல்வா உள்ளிட்ட பலர் தினேஷ் உடன் நடித்துள்ளனர். ஜெயகுமார் மற்றும் புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:
"இந்தப் படத்தின் டீஸர் மூலமாக இயக்குநர் கோபிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பல நிகழ்ச்சிகளிலிருந்து இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. படத்தில் பங்கேற்றவர்களை மேடையேற்றி இருக்கிறார்கள். நான் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன். நல்லது செய்தால் தட்டிக்கொடுப்பேன். நான் சின்ன படங்களின் விழாக்களைத் தவறவிட மாட்டேன். பெரிய படங்களுக்குச் செல்லமாட்டேன்.
தம்பி கோபி இளைஞர்களை ஈர்க்கும் விதமாகப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயித்த பின்பும் அவர் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும். இன்று எவ்வளவோ படங்கள் எடுத்த ஒரு நிறுவனம் ஒரு படம் கூட எடுக்க முடியாமல் இருக்கிறது. காரணம் ஒரு இயக்குநர்.
சின்ன சின்ன படங்கள் தயாரித்து பெரிய பெரிய வெற்றியைப் பெற்றவர் ராம.நாராயணன். 30 நாட்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடுவார். கதாநாயகனை நம்பமாட்டார். நாய், கழுதையை நம்புவார். சுமார் 80 வெற்றிப் படங்களை எடுத்தவர் ராம.நாராயணன். அதேபோல் கோபி தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும் வேலையைச் செய்யவேண்டும். 'நானும் சிங்கிள் தான்' படத்தில் அத்தனை பேரின் உழைப்பும் அருமையாக இருக்கிறது.
விஜய் படத்திற்குத் தமிழக அரசு 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். உடனே அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கடிதம் வருகிறது. சரியென்று 50% இருக்கையிலேயே படத்தை வெளியிட்டார்கள். அந்தப் படம் திரையரங்கில் ஓடி முடிந்து ஓடிடியில் வெளியானவுடன் 100% இருக்கைக்கு அனுமதி என்கிறார்கள். அதில் என்ன அரசியலோ தெரியவில்லை. நமக்கு அது தேவையில்லை.
தமிழக அரசு கரோனா பிரச்சினையைச் சிறப்பாகக் கையாண்டது. அதில் குறையே சொல்ல முடியாது. அதற்கு தமிழக அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100% இருக்கைக்கு அனுமதித்ததிற்கும் பாராட்டுகள். ஒரே நாடு ஒரே வரி என்கிறோம். வேறு எந்தவொரு மாநிலத்திலும் அல்லாமல் தமிழகத்தில் 8% கேளிக்கை வரி இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்".
இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.