தமிழ் சினிமா

‘மக்களுக்குப் போராட உரிமை உண்டு'- விவசாயிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆதரவு

செய்திப்பிரிவு

விவசாயிகளின் போராட்டத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

இதில், போலீஸார் விதித்த கட்டுப்பாடுகளை மீறி செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றிய ஒரு செய்தியின் இணைப்பைப் பகிர்ந்து ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோரும் விவசாயிகளை ஆதரித்து ட்வீட் செய்தனர்

இந்தப் பதிவுகள் இணையத்தில் பெரும் வைரலாகின. இதுவரை லட்சக்கணக்கான மக்களால் ரீட்வீட் செய்யப்பட்டு உலக அளவில் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தன.

ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துகளைக் குறிப்பிட்டு இந்தியாவைச் சேர்ந்த சச்சின், அக்‌ஷய் குமார், கங்கணா, சுனில் ஷெட்டி, விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் தங்கள் ட்விட்டரில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்கள் நாட்டுப் பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று பதிவிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மக்களுக்குப் போராட உரிமை உண்டு. மக்களின் நலனை அரசு காக்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொள்ளுமாறு விவசாயிகளை நிர்பந்திப்பது தற்கொலைக்குச் சமம். மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுகின்றனர். அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்''.

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT