வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படம் தொடர்பாக எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
"சிம்புவுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று பேசினார் வெங்கட் பிரபு. முழுக்கதையையும் கேட்டு முடித்தவுடனே, எழுந்து கட்டிப்பிடித்து நடிக்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கதையிலிருந்த சந்தோஷத்தின் வெளிப்பாடுதான். கண்டிப்பாக அதே மனநிலையை ரசிகர்களும் உணர்வார்கள்.
ஏனென்றால், ரொம்பப் புதுமையான, சுவாரசியமான, கச்சிதமான கதை. இந்திய சினிமாவில் இப்படியொரு திரைக்கதை என்பது இதுதான் முதல் முறை. ஹாலிவுட்டில் இப்படியொரு திரைக்கதை வந்துள்ளதா என்பது தெரியாது. ஆனால், இந்தியாவில் முதல் முறை. அப்படியொரு திரைக்கதை நம் மக்களுக்கும் புரியும் வகையில் ரொம்ப சுவாரசியமாக வெங்கட் பிரபு தனது பாணியில் சொல்லியிருக்கிறார்.
எனது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசினால் முழுக்கதையும் தெரிந்துவிடும். சிம்புவை நீண்ட காலம் கழித்துப் படப்பிடிப்புத் தளத்தில் பார்த்தேன். கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார். இருவருமே நெருங்கிய நண்பர்கள். வெவ்வேறு வேலைகளில் மும்முரமாக இருந்ததால், நடுவில் சில வருடங்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் அந்த நட்பு அப்படியே இருப்பதை அவர் பேசும்போது தெரிந்துகொண்டேன்.
முன்பு பார்த்த சிம்புவுக்கும், இப்போதைய சிம்புவுக்கும் நிறைய மாற்றங்கள். அவருடைய மனநிலையில், எண்ண ஓட்டத்தில் முழுமையாக மாறியிருக்கிறார். எனக்கும் சிம்புவுக்கும் உள்ள காட்சிகள் எல்லாம் செம ஹைலைட்டாக இருக்கும். அந்தக் காட்சிகளைத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்".
இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.