தமிழ் சினிமா

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் எதிர்ப்புக் குரல்

ஸ்கிரீனன்

தமிழ் சினிமாவில் சம்பளத்தை குறைக்கும் வரை நட்சத்திர நடிகர்களை தயாரிப்பாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'அம்மணி'. இப்படத்தில் 80 வயதான சுப்புலட்சுமி என்பவர் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் தற்போது தொலைகாட்சி உரிமம் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பெரிய பொருட்செலவில் பெரிய நாயகர்களை வைத்து உருவாகும் படங்களுக்கே தொலைகாட்சி நிறுவனங்கள் முன்னுரிமை தருகிறது.

இப்பிரச்சினைக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சி உரிமத்திலிருந்து வரும் பணம் பல தயாரிப்பாளர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆனால், முறையற்ற நிர்வாகத்தாலும், செயற்கையான விளம்பரங்களாலும் தற்போது அதுவும் கெட்டுவிட்டது. செலவில் 50 சதவீதம் வரை தொலைக்காட்சி உரிமத்தில் பெறலாம் என்கிறார்கள். ஆனால் 100 சதவீதத்துக்கும் அதிகமாக தொலைக்காட்சிகளிடமிருந்து பணம் பெறப்படுகிறது.

பிறகு எப்படி அவர்களால் செலவழித்த பணத்தை சம்பாதிக்க முடியும்? இத்தகைய செயல்களில் அதிகாரத்தில் இருப்பவர்களே உள்நோக்கத்தோடு ஈடுபடுகிறார்கள். இதனால் சாட்டிலைட் / தொலைக்காட்சி உரிமம் என்ற சந்தையே நாசமடைந்துவிட்டது.

சேனல்களுடன் சண்டையிடுவதை விட்டு நாமும் அவர்களோடு இணைந்து ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், நாயகர்களின் சம்பளத்தை குறைக்கவும் போராட வேண்டும். ஏஜிஎஸ் அகோரம் போன்ற தயாரிப்பாளர்கள் இன்னமும் கூட அந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். தற்போது அவர் நாயகர்களுடன் லாபத்தில் பங்கிடுவது குறித்தும் திட்டமிட்டுவருகிறார்.

சிறு தயாரிப்பாளர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அனைத்து தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக சேர்ந்து, சம்பளத்தை குறைக்கும் வரை நாயகர்களை புறக்கணிக்க வேண்டும். விளம்பரங்களை கட்டுப்படுத்துவதை விட வேரிலிருக்கும் பிரச்சினையை தீர்க்க போராடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT