கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் விரைவில் ரீமேக்காக இருக்கிறது.
1982ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மூன்றாம் பிறை'. இளையராஜா இசையமைத்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும், தமிழக அரசின் 5 விருதுகளையும் வென்றது.
இப்படம் இந்தியில் 'சத்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் வரவேற்பு பெற்றது. இந்தி ரீமேக்கை தயாரித்த ராஜ் சிப்பியிடம் இருந்து லாய்ட் பேப்டிஸா (Llyod Baptisa) என்ற பிரபல விளம்பர பட இயக்குநர் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.
'மூன்றாம் பிறை' படத்தை மீண்டும் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், நாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட திரைக்கதையில், நாயகனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றி எழுத இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் தெரியப்படுத்தவில்லை.