தமிழ் சினிமா

'என் ராசாவின் மனசிலே 2' உருவாகிறது: ராஜ்கிரணின் மகன் இயக்குநர் ஆகிறார்

செய்திப்பிரிவு

'என் ராசாவின் மனசிலே' 2-ம் பாகத்தின் மூலம் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குநராக அறிமுகமாகிறார்.

1991-ம் ஆண்டு வெளியான படம் 'என் ராசாவின் மனசிலே'. ராஜ்கிரண் தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான் மீனா, வடிவேலு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமானார்கள். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஜ்கிரண். இந்நிலையில், 'என் ராசாவின் மனசிலே' 2-ம் பாகத்தை உருவாக்கவுள்ளார்.

இது தொடர்பாக ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். 'என் ராசாவின் மனசிலே' 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குநராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்".

இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT