தமிழ் சினிமா

தன் படத்தின் ரீமேக்கில் நடிக்காதது ஏன்? - சூர்யா விளக்கம்

செய்திப்பிரிவு

தன் படத்தின் இதர மொழி ரீமேக்கில் நடிக்காதது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்துக்குத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.

இதனிடையே, இவருடைய நடிப்பில் வெளியான படங்களில் 'காக்க காக்க', 'கஜினி' உள்ளிட்ட சில படங்கள் இதர மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரீமேக் எதிலுமே சூர்யா நடிக்கவில்லை. இது தொடர்பான கேள்விக்கு சூர்யா கூறியிருப்பதாவது:

"ஒரு விஷயத்தைச் செய்து முடித்து விட்டு மீண்டும் செய்யத் தோன்றாது. நாம் மீண்டும் 10-வது, 12-வது பரீட்சையை எழுத விரும்ப மாட்டோம் இல்லையா. அது முடிந்தது. அடுத்த விஷயத்துக்கு நகர வேண்டும். இன்னும் உற்சாகம் தரும் ஒரு விஷயத்துக்குச் செல்ல வேண்டும் இல்லையா. அப்படித்தான்.

நான் இந்தியில் ('ரத்த சரித்திரம் 2') நடிக்கக் காரணம், ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். இந்தி எனக்கு எளிதாக இருக்கவில்லை. மற்ற மொழியில் பேசுவதே எனக்குக் கடினம் தான். மீண்டும் ஒரு பாலிவுட் திரைப்பட வாய்ப்பு (நான் விரும்புவதைப் போல) வந்தால் கண்டிப்பாக அதைச் செய்ய நான் இன்னும் என்னைக் கடுமையாக உந்தித் தள்ளுவேன். நாம் எதிர்கொள்ள விரும்பும் ஒரு சவாலாக அது இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கையைச் சுவாரசியமாக வைத்திருக்கும்"

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT