திருமணம் ஆகிவிட்டதாகப் பரவும் செய்திக்கு சனம் ஷெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இந்தாண்டு பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். அங்குத் தனது செயலின் மூலம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தவுடன், பல்வேறு போட்டோ ஷூட்கள் செய்து புகைப்படங்களை வெளியிட்டார். அதில் புடவை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் நெற்றிக்கு மேலே குங்குமம் வைத்திருந்தார். இதை வைத்து பலரும் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று கருதினார்கள்.
இதனை ரசிகர் ஒருவர் சனம் ஷெட்டியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "எனக்கொரு சந்தேகம். சனமுக்கு திருமணமாகிவிட்டதா? ஏன் நெற்றிக்கு வகுடில் குங்குமம் வைக்கிறீங்க?" என்று கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:
"இந்த கேள்வியைக் கேட்கும் பலரும் கேட்கிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்னமும் இல்லை. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் ஒருநாள் இருக்கலாம். என் வீட்டில் திருமணமான பெண்களுக்குத் தான் நெற்றியில் குங்குமம் என்ற கட்டுப்பாடு இல்லை."
இவ்வாறு சனம் ஷெட்டி பதிலளித்துள்ளார்.