ரஜினி நடித்த ‘எந்திரன்’ கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ல் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ என்ற கதை ஒரு இதழில் வெளியானது. அதே கதை மீண்டும் மற்றொரு நாவலிலும் 2007-ல் வெளியானது. இந்நிலையில் கடந்த 2010-ல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் வெளியானது. தனது கதையைத் திருடி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த 2011-ல் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை எதிர்த்து கலாநிதி மாறனும், ஷங்கரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இயக்குநர் ஷங்கர் மீது மட்டும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளதால் அவருக்கு எதிரான வழக்கை மட்டும் எழும்பூர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என கடந்த 2019-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷங்கர் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 2-வது எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான ஆரூர் தமிழ்நாடன் மட்டும் ஆஜரானார். இயக்குநர் ஷங்கர் ஆஜராகவில்லை. ஷங்கர் சார்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.